தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3-ந்தேதி ஒரே தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3-ந்தேதி ஒரே தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 17 Dec 2018 4:00 AM IST (Updated: 17 Dec 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3-ந்தேதி ஒரே தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என பொது சுகாதார துறை அதிகாரி கூறினார்.

திருச்சி,

தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் திருச்சியில் நேற்று போலியோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது. ரோட்டரி கவர்னர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்த பயிலரங்கில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் டாக்டர் கே.குழந்தைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆகவே 2020-ம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நிறுத்தி விடலாம் என திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் போலியோ நோய் இன்னும் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. அந்த நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மூலம் இந்நோய் பரவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் சான்றிதழ் அளிக்கும் வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது தொடரும்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி ஒரே தவணையாக ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். ரோட்டரி சங்கத்தினர், அங்கன்வாடி மையத்தினர், பொதுசுகாதார துறை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். இன்றைய இளம் தலைமுறையினரிடம் போதுமான விழிப்புணர்வு இருந்தாலும், போலியோ நோயின் தாக்கம் பற்றி அதிகம் தெரியவில்லை. எனவே அதற்கான பிரசாரத்தில் பொது சுகாதார துறை மற்றும் ரோட்டரி சங்க பிரமுகர்கள் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிலரங்க தலைவர் பாலச்சந்திரன், இணை தலைவர் செந்தில்வேல், டாக்டர்ஜமீர் பாஷா மற்றும் பொது சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story