ஜனவரி 7-ந்தேதி கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்


ஜனவரி 7-ந்தேதி கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:15 AM IST (Updated: 17 Dec 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஜனவரி மாதம் 7-ந்தேதி கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஜாக்டோ- ஜியோ முடிவு செய்திருப்பதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது தொடர்பாகவும் விளக்க கூட்டம் ஜங்ஷன் அருகே உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான ரெங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 4-ந்தேதி முதல் தொடங்க இருந்தோம். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் நீதிபதிகளின் அறிவுரையின் படி வேலைநிறுத்தத்தை தள்ளி வைத்தோம்.

கோரிக்கைகள் தொடர்பாக அரசின் அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் 7-ந்தேதி மறுவிசாரணை வரும்போது அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 7-ந்தேதி கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் அடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடர முடிவு செய்துள்ளோம்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். ஆசிரியர்களை அலட்சியப்படுத்தும் வகையில் கேள்வி கேட்கின்றனர். நிர்வாகத்தில் குளறுபடிகளை சரி செய்யாமல் ஆசிரியர்களை கேள்வி கேட்கின்றனர். தமிழகம் முழுவதும் இதேபோன்று இந்த குழுவினரின் செயல்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story