வீராணம் ஏரியில் அதிகாரி ஆய்வு
வீராணம் ஏரியில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் நேரில் ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 270 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் பாசனத்திற்கு 130 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் சென்னையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று வருகை தந்தார். ஏரியின் கரைப்பகுதி மற்றும் பாசன மதகுகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவாக உயர்த்தி, இந்த ஆண்டு விவசாயத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்கவும், சென்னைக்கு குடிநீர் வழங்கவும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வின் போது அவருடன் சிறப்பு தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் மணிமோகன், உதவி பொறியாளர்கள் அருணகிரி, குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story