மோட்டார்சைக்கிளில் சென்ற போது, லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி - ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர் ஜெகன்(24) என்பவருடன் பெருமாநல்லூர் ரோடு வழியாக திருப்பூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். இவர்கள் மில்லர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் மோகன்ராஜ் சிக்கினார். இதனால் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ஜெகன் கீழே விழுந்ததில் லேசான காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜெகனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உருக்குலைந்த நிலையில் கிடந்த மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார்சைக்கிளில் இருவரும் அதிக வேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக மோகன்ராஜின் உடல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் இரவே அவருடைய உறவினர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகமான உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வந்திருந்ததால் மோகன்ராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் அங்குள்ள பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக் காக வந்திருந்த உடல்களை வாங்குவதற்காக, உறவினர்கள் ஏராளமானோர் அங்கு கூடியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story