திருக்கனூர், பத்துக்கண்ணு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


திருக்கனூர், பத்துக்கண்ணு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Dec 2018 1:33 AM GMT (Updated: 17 Dec 2018 1:33 AM GMT)

எச்.ராஜாவை கண்டித்து திருக்கனூர், பத்துக்கண்ணு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியல் செய்தனர்.

திருக்கனூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்து இருந்தார். இதனை கண்டித்தும், எச்.ராஜாவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருக்கனூர், பத்துக்கண்ணு உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

ஊசுடு தொகுதி நிர்வாகிகள் தனுசு, விடுதலை வளவன் தலைமையில் பத்துக்கண்ணு 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் மண்ணாடிப்பட்டு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருக்கனூர் கடை வீதியில் தொகுதி செயலாளர் சிவசங்கர், குப்புசாமி ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். பாண்டுரங்கன், சாரங்கபாணி, திருமால் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அவரது உருவபடத்தை தீ வைத்து எரித்தனர்.

அங்கு இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் கிராமப்புற பகுதியில் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இது பற்றி தகவல் அறிந்த உடன் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story