தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி; மதுரையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தீர்மானம்
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை,
மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை மற்றும் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் காந்திமியூசியம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது. மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம் தலைமை தாங்கினார். ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் நிர்மலா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் செயல்பாடுகள், முக்கியத்துவம், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் பல்வேறு தகவல்களை பெறுவதற்கு மனு செய்தனர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, வைகை நதி மக்கள் இயக்க தலைவர் ராஜன், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் கிளையினை மதுரையில் அமைக்க வேண்டும். மராட்டியம், டெல்லி மாநிலத்தில் உள்ளது போல் ஆன்லைன் முறையில் தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்ய வசதி ஏற்படுத்திதர வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது போல், பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.