திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் முதல்–அமைச்சர் மீது குற்றச்சாட்டு
சென்னை–சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து திட்ட எதிர்ப்பாளர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
சென்னை – சேலம் இடையே 278 கிலோ மீட்டர் தூரம் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்பட 5 மாவட்டங்கள் வழியாக புதிதாக 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் ஊன்றினர்.
இந்த 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ய இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி இந்த 8 வழிச்சாலைக்கு நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்போவதாகவும், விவசாயிகள் தங்கள் கருத்துகளை 21 நாட்களில் தெரிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சென்னை– சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோதி, நாரயணசாமி, அபிராமன், பாசறை பாபு, வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 8 வழிச் சாலையை அமைக்க முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்– அமைச்சர் 8 வழிச்சாலை விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்த சாலைக்கு 89 சதவீதம் மக்கள் ஆதரவாகவும், 11 சதவீதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பாகவும் உள்ளதாக அவர் கூறுகிறார். புள்ளி விவரங்கள் குறித்த தகவலை தமிழக முதல்– அமைச்சர் பேசும்போது கவனமாகவும், பொறுப்புடனும் தெரிவிக்க வேண்டும். 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நோக்கம் நிறைவேறாது. விவசாயிகளுக்கு துரோகம் செய்ய எந்த அரசு நினைத்தாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதன் பதில் எதிரொலிக்கும்’’ என்றனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நில எடுப்பு தனி வருவாய் அலுவலரிடம் ஆட்சேபனை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.