படைவீடு பேரூராட்சியில் ரூ.22.69 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்


படைவீடு பேரூராட்சியில் ரூ.22.69 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

படைவீடு பேரூராட்சியில் ரூ.22.69 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம் ,

குமாரபாளையம் வட்டம் படைவீடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிகளில் பல்வேறு பகுதிகளில் மூலதன நிதி திட்டம், நெடுஞ்சாலை திட்டம், நபார்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு இடைவேளி நிரப்பும் நிதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் பி.தங்கமணி பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

முதலாவதாக ரூ.48 லட்சத்தில் உப்புபாளையம், வார்டு எண்-10 மாங்காடு பகுதியில் மண்சாலையை தார்சாலையையாக மாற்றி அமைக்கும் பணி, ரூ.25 லட்சத்தில் தாண்டாங்காடு, வார்டு எண்-9 வால்ராசபாளையம் தாண்டாங்காடு தார்சாலையை புதுப்பித்தல், ரூ.50 லட்சத்தில் அல்லிநாயக்கன்பாளையம் அண்ணாநகர் வார்டு எண்-12 அல்லிநாயக்கன்பாளையம் அருந்ததியர் தெருவில் வடிகாலுடன் கூடிய தார்சாலையை மேம்பாடு செய்தல், ரூ.25 லட்சத்தில் கவுண்டனூர் மாரியம்மன் கோவில் அருகில் தேசிய நெடுஞ்சாலை முதல் கவுண்டனூர் மாரியம்மன் கோவில் வரை கல்வெட்டுடன் தார்சாலை மேம்பாடு செய்தல், ரூ.25 லட்சத்தில் கல்லுகட்டியூர் மாரியம்மன் கோவில் முதல் சங்ககிரி - பள்ளிபாளையம் சாலை வரை தார்சாலை மேம்பாடு செய்தல் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் ரூ.1.36 கோடியில் முதலைமடையூர் பகுதியில் வார்்டு எண்-11 நத்தமேடு முதல் முதலைமடையூர் வரை தார்சாலை புதுப்பித்தல் பணி, ரூ.1 கோடியில் அல்லிநாயக்கன்பாளையம் அண்ணாநகர் பகுதியில் வார்டு எண்-12 அல்லிநாயக்கன்பாளைம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் மழையூர் சாலை, காளியம்மன் கோவில் சாலை மற்றும் அருவாபாலியூர் சாலை அமைத்தல், ரூ.11.76 லட்சத்தில் வார்டு எண்-13, அல்லிநாயக்கள்பாளையம் பகுதியில் கழிப்பிடம் அமைத்தல், ரூ.16.89 கோடியில் பச்சாம்பாளைம் பகுதியில் படைவீடு பேரூராட்சிக்கு புதிய காவிரி கூட்டு குடிநீர்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ரூ.1 கோடியில் பச்சாம்பாளையம் பகுதியில் வார்டு எண்-14 பச்சாம்பாளையம் குடித்தெரு பகுதியில் தார்சாலை மேம்பாடு செய்தல் பணி, ரூ.24.50 லட்சத்தில் வார்டு எண்-5 வளம்மீட்பு பூங்காவில் காவலர் அறை, சுற்றுச்சுவர், கான்கிரீட் சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு அமைத்தல் பணி, ரூ.5 லட்சத்தில் பள்ளத்தூர் பகுதியில் பள்ளத்தூர் மாரியம்மன் கோவில்வீதி கான்கிரீட் சாலை அமைத்தல் பணி, ரூ.7 லட்சத்தில் கணக்கன்காடு அரினைர் தெருவில் வடிகால் அமைத்தல் பணி என மொத்தம் ரூ.22.69 கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் படைவீடு பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், படைவீடு பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், பேரூராட்சிகள் செயற்பொறியாளர் மோகன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர் தங்கமணி படைவீடு நத்தமேடு பகுதியில் மேம்படுத்தப்பட்ட மருந்தகத்துடன் கூடிய கால்நடை மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.

Next Story