ஜல்லிக்கட்டில் காளையர்களை கதறவிட தயாராகும் காளைகள்


ஜல்லிக்கட்டில் காளையர்களை கதறவிட தயாராகும் காளைகள்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:30 PM GMT (Updated: 17 Dec 2018 8:33 PM GMT)

ஜல்லிக்கட்டில் காளையர்களை கதறவிட காளைகள் தயாராகி வருகின்றன.

நெய்க்காரப்பட்டி,

‘ஜல்லிக்கட்டு’ தமிழர்களின் வீர விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றதாகும். இதுதவிர திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக் கட்டு போட்டி திருவிழா போல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) பொங்கல் பண்டிகையையொட்டி ‘ஜல்லிக்கட்டு’ நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் காளைகளை வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு தீவிர பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, சின்னக்காந்திபுரம் பகுதிகளில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நெய்க்காரப்பட்டி பகுதியில் மாறன் (வயது 35) என்பவர் வளர்க்கும் ‘கருப்பு’ என்றழைக்கப்படும் காளைக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து நாம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

வாடிவாசலில் தன்னை பிடிக்க வரும் காளையர்களை கதறவிடும் காளையாக எங்கள் ‘கருப்பு’ திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங் களில் நடைபெறும் ‘ஜல்லிக் கட்டு’ மற்றும் மஞ்சுவிரட்டில் கருப்பை மாடுபிடி வீரர்கள் யாராலும் நெருங்க முடியாது. அந்த அளவுக்கு களத்தில் தனது தனித்தன்மையை ‘கருப்பு’ நிரூபித்து வருகிறது. ‘ஜல்லிக்கட்டு’ நடைபெறுவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பே அதற்கான பயிற்சியை தொடங்கிவிடுவோம். இதற்காக எங்களின் தோட்ட பகுதியிலேயே வாடிவாசல் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதில் காளையை ஓடவிட்டு பயிற்சி கொடுக்கப்படும். பின்னர் மணலை மேடாக பரப்பி வைத்து, அதன் அருகில் காளையை விடுவோம். அப்போது அது தனது கொம்பால் மணலை குத்தி கிளறும். இது எதிரிகளை கொம்பால் பந்தாட அதற்கு கொடுக்கப்படும் பயிற்சி ஆகும். அதே போல் நடை பயிற்சி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது என்றார்.

இதே போல் சின்னக்காந்திபுரம் அய்யர்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (43) என்பவர் வளர்க்கும் ‘கருப்பன்’ என்ற காளை, நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அய்யம்பாளையம், தேனி பள்ளவராயன்பட்டி, தாடிக்கொம்பு மறவபட்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டில் 6 முறை பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒருமுறை தங்கப்பதக்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘கருப்பன்’ குறித்து ஆறுமுகம் கூறுகையில், வெள்ளச்சோளம், குதிரைவாலி, பயறு வகைகள், பருத்திக்கொட்டை ஆகியவை அவற்றுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது.

அத்துடன் ‘ஜல்லிக்கட்டு’ நடைபெறாத சமயத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வசம் ஒப்படைக்கப்படும். மலைப்பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளே அதற்கு உணவாகும். மற்றபடி ‘ஜல்லிக்கட்டு’க்கு நீச்சல், மண்ணை குத்துதல் உள்ளிட்ட பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.

Next Story