மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்கு கலெக்டர் அலுவலகத்துக்கு சங்கு ஊதி வந்தவர்களால் பரபரப்பு


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்கு கலெக்டர் அலுவலகத்துக்கு சங்கு ஊதி வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:00 PM GMT (Updated: 17 Dec 2018 7:00 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு சங்கு ஊதி வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக, அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமையில் அந்த சங்கத்தினர் வந்தனர். பின்னர் அவர்கள், சங்கு ஊதியபடி கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து 7 உட்பிரிவினரை வெளியேற்றி ‘தேவேந்திர குல வேளாளர்‘ அல்லது ‘வேளாண் மரபினர்‘ என தனிபட்டியல் உருவாக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர், மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் அவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே மாநில தலைவர் ஜோதிமுருகன் தலைமையில் ஒரு மனு கொடுத்தனர். அதில், கல்வெட்டு, செப்பு பட்டயம் உள்பட வரலாற்று ஆவணங்களில் எங்கள் சமுதாயத்தினரை வேளாளர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, பிற சமுதாயத்தினருக்கு தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரை வழங்க கூடாது என்று கூறியிருந்தனர்.

வேளாளர் என்ற பெயரை ஒரு சமூகத்தினர் கேட்டும், இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் கலெக் டர் அலுவலகத்தில் மனுக் களை கொடுத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் ஒட்டன்சத்திரம் வள்ளுவர்நகரை சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், வள்ளுவர்நகரில் 38 குடும்பத்தினர் வீடு கட்டி 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தோம். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் 2 முறை வந்து நிலத்தை அளந்தனர். ஒருசில வாரத்தில் பட்டா வழங்கப்படும் என்று கூறினர். எனினும், இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும், என்றனர்.

வேடசந்தூர் இந்திராநகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், இந்திராநகரில் ஆற்றுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சலவை தொழிலாளர்கள் ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கிராமிய கலைஞர்கள் நலச்சங்கத்தினர் புயல் நிவாரண நிதியாக ரூ.30 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் சங்கத்தில் மேளம், நாதஸ்வரம், மயிலாட்டம், மானாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் இருக்கிறோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரண நிதி வழங்கி இருக்கிறோம், என்றனர்.


Next Story