‘கஜா’ புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ரேஷன் கார்டுகளை, கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்க பெண்கள் முயற்சி


‘கஜா’ புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ரேஷன் கார்டுகளை, கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்க பெண்கள் முயற்சி
x
தினத்தந்தி 18 Dec 2018 4:15 AM IST (Updated: 18 Dec 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ரேஷன் கார்டுகளை, கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்க பெண்கள் முயற்சி செய்ததால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலநரிக்குடி கிராமம், ‘கஜா’ புயல் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு புயல் நிவாரணம் கிடைக்கவில்லை.

புயல் நிவாரணத்தை உடனடியாக வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்க பெண்கள் முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அலுவலகத்தில் கலெக்டர் இல்லாததால் பெண்கள், ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்கும் முயற்சியை கைவிட்டு, கோரிக்கை மனுவை மட்டும் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீரக்களூர் ஊராட்சி மேலநரிக்குடி கிராமத்தை ‘கஜா’ புயல் தாக்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும், கிராமத்துக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. புயல் நிவாரணம் கிடைக்கவில்லை.

குடிநீரை தேடி அருகே உள்ள விளக்குடி கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கும் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். புயல் காற்றினால் கூரைகளை இழந்த வீடுகளுக்கு தார்ப்பாய் கூட கிடைக்கவில்லை. இந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story