கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் 7-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்ததால் பொதுமக்கள் அவதி


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் 7-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 7:31 PM GMT)

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 7-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்ததால் மக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

மயிலாடுதுறை,

இணையதள சேவையுடன் கம்ப்யூட்டர் வசதி செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி படிப்பை பட்ட படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு கழிவறை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10-ந் தேதியில் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7-வது நாளான நேற்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்கத்தின் வட்டார தலைவர்கள் திருமலைசங்கு, பவளச்சந்திரன், ஜெயபிரகாஷ், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் குமரன் நன்றி கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், திருமண உதவித்தொகை சான்று, வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகிறார்கள்.

Next Story