ஆவடியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


ஆவடியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 7:36 PM GMT)

ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஆவடி,

ஆவடி, மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய வட்டார போக்குவரத்து அலுவலகம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

இந்த கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை. ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர், வாகனம் ஓட்டி காட்ட இடம் இல்லை. எனவே நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதன் காரணமாக பல விபத்துகள் நடந்து வந்தன. இதுபோல் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன.

எனவே வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டில் சாந்தி கார்டன் பகுதியில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

புதிய கட்டிடம் திறப்பு

இங்கு தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக போக்குவரத்து தொடர்பான அருங்காட்சியகம், ஆவணங்களுக்கான நடவடிக்கை விரைந்து எடுக்க நவீன வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம், ஆண், பெண் கழிப்பிடம், குடிநீர் வசதி, சாலை விழிப்புணர்வு பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில், இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்தார். ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் பிரசன்னா, போக்குவரத்து அலுவலர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர். நேற்று முதல் புதிய கட்டிடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Next Story