கலெக்டர் அலுவலகத்தில் தவழ்ந்தபடி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தூக்கி சென்ற ஊர்க்காவல் படைவீரர்


கலெக்டர் அலுவலகத்தில் தவழ்ந்தபடி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தூக்கி சென்ற ஊர்க்காவல் படைவீரர்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:15 AM IST (Updated: 18 Dec 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தவழ்ந்தபடி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கைகளில் தூக்கி சென்று மனு கொடுக்க வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழையூர் அருமுனை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். மாற்றுத்திறனாளியான இவரால் நடக்க முடியாது. இவர், கலெக்டர் அலுவலகத்தில் தவழ்ந்தபடி வந்து கொண்டிருந்தார். இதை போலீஸ்காரர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊர்க்காவல்படை வீரர் சரத்குமார் பார்த்தார். உடனே அவர், அந்த மாற்றுத்திறனாளியை கைகளில் தூக்கி கொண்டு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம் சிலம்பரசன் மனு கொடுத்தார்.

அதில், நான் தொகுப்பு வீட்டில் வசித்து வருவதால் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்தும், எனக்கு நிவாரணம் கிடையாது என்று கூறிவிட்டனர். எனக்கு 2 கால்களாலும் நடக்க முடியாது. திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். பெட்டிக்கடை வைத்து இருந்தேன். கஜா புயலால் கடை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

எனவே சுயதொழில் தொடங்க அரசு பண உதவி செய்தால் என் குடும்பம் வாழ வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். உடனே மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அவரை தூக்கிக் கொண்டு ஊர்க்காவல்படை வீரர் சென்றார். அந்த மாற்றுத்திறனாளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த சரத்குமாரை அனை வரும் பாராட்டினர்.

பூதலூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் சண்முகராஜ், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் ராஜகோபாலன் மற்றும் நிர்வாகிகள், வணிகர்கள் பலர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதில் பூதலூர் நால்ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணி, வடிகால் கட்டும் பணி 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் மாணவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நால்ரோடு பகுதியில் நவீன கழிப்பறை கட்ட வேண்டும். பூதலூர் பஸ் நிறுத்தம் அருகே கழிவறை முறையாக பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் தங்கராசு தலைமையில் கிராமமக்கள் பலர், அதிகாரிகளிடம் அளித்த மனுவில், துறையுண்டார்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் தெரு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்து முன்னணி மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈசானசிவம் தலைமையில் நிர்வாகிகள் சிலர் அளித்த மனுவில், தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை குளத்திற்கும், ஜெயவீர ஆஞ்சநேயர், பால்வினாயகர் கோவி லுக்கு மக்கள் சென்று வர பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Next Story