உக்கடம், கோவைப்புதூர் பகுதிகளில் 2,096 அடுக்குமாடி குடியிருப்புகள் - காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்


உக்கடம், கோவைப்புதூர் பகுதிகளில் 2,096 அடுக்குமாடி குடியிருப்புகள் - காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:30 PM GMT (Updated: 17 Dec 2018 7:44 PM GMT)

கோவை உக்கடம், கோவைப்புதூர் பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட மொத்தம் 2,096 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்.

கோவை, 

குடிசைமாற்று வாரியம் சார்பில் ரூ.94 கோடியே 42 லட்சம் செலவில் கோவை உக்கடம் கழிவு நீர் பண்ணை அருகில் 1,392 வீடுகள் ஒரு பிரிவாகவும், 448 வீடுகள் மற்றொரு பிரிவாகவும் மொத்தம் 1,840 வீடுகள் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதேபோல் கோவைப்புதூர் திரு.வி.க.நகர் பகுதியில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 256 வீடுகள் தலா ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.20 கோடியே 56 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வீடுகளை பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியும், குடியிருப்பு தொடக்க விழாவும் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த குடியிருப்புகளை ஏழை, எளிய மக்களுக்கு அர்ப்பணித்தார். அப்போது துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் இருந்தனர்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஹரிகரன், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் குமார், ராஜசேகரன், மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் கூறிய தாவது:-

அனைத்து அடிப்படை வசதிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டு, இதற்கான பயனாளிகள் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீர்நிலை ஓரம் குடியிருந்தவர்கள் மற்றும் குடிசைகளில் குடியிருந்தவர்கள் கணக்கெடுக்கப்பட்டு குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முத்தண்ணன் குளக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் குடியமர்த்தப்பட்ட பின்னர், குளக்கரை பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாதவாறு இடித்து அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story