ஆம்பூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
ஆம்பூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் சான்றோர்குப்பம், மாதகடப்பா பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 20). தந்தையும், மகனும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை செங்கல் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி டிராக்டர் சென்றது. டிராக்டரை அன்புராஜன் என்பவர் ஓட்டினார். சக்திவேல், கார்த்திகேயன் இருவரும் டிரைவரின் பக்கத்தில் அமர்ந்து வந்தனர்.
ஆம்பூர் புதுகோவிந்தாபுரம் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் திடீரென டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த தந்தை, மகன் மற்றும் டிரைவர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது டிராக்டரில் இருந்த செங்கற்கள் விழுந்து அதில் சிக்கி கொண்டனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த வழியே வந்த போலீசார் உடனடியாக செங்கலை அப்புறப்படுத்தி, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல், அன்புராஜன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). இவர், மோட்டார் சைக்கிளில் மாதனூர் நோக்கி சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுரேஷ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story