பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நூதன போராட்டம்


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:15 PM GMT (Updated: 17 Dec 2018 8:48 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பட்டா மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் அனைவருக்கும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக பணியிடங்களை மறுசீராய்வு செய்யவும், கிராம நிர்வாக அலுவலங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் வேண்டும். மேலும் கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாலுகா அலுவலகங்கள் மூலம் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள், பட்டா மாறுதல் உள்பட 24 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் சான்றிதழ்களை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் மண்டியிட்டு கோஷங்கள் எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் வட்ட செயலாளர் மாயாவு, பொருளாளர் வினுகார்த்திக் மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில மையத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்டமாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டு மனு கொடுக்கப்படும் என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story