வேப்பத்தூர் அருகே சரக்கு வேன் மீது கார் மோதல்; 6 பேர் படுகாயம் டிரைவர் கைது


வேப்பத்தூர் அருகே சரக்கு வேன் மீது கார் மோதல்; 6 பேர் படுகாயம் டிரைவர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

வேப்பத்தூர் அருகே சரக்கு வேன் மீது கார் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பருத்திகுடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 43). வாழைப் பழ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் ஆடுதுறையில் இருந்து சரக்கு வேனில் வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு, மீன்சுருட்டி சந்தைக்கு வந்தார். அங்கு வியாபாரம் செய்துவிட்டு, இரவு 9 மணி அளவில் மீண்டும் அதே வேனில் தனது ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தார். அணைக்கரையை அடுத்த தென்னவநல்லூர் கிராமம் அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார், சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேனில் பயணம் செய்த சங்கர், வேப்பத்தூர் அருகே உள்ள கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42), பருத்திகுடி கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(65), காரில் பயணம் செய்த ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர்களான நரசிம்மா மனைவி கங்காபானு(27), கிரிபிரசாத் மனைவி திரிஷா(28) மற்றும் கடப்பா மாவட்டம் ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்த இப்ராஹீம் மகன் மன்சூர்(23) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

டிரைவர் கைது

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் டிரைவர் முகமதுஜானியை(21) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். காரில் சென்றவர்கள் ஆந்திராவில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story