மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவினால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம்,
கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு புரட்டாசி மாத கடைசியிலேயே பனி அதிகமாக இருந்தது. தற்போது மார்கழி மாதம் பிறந்த நிலையில் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாலை 5 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த பனிப்பொழிவு மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தினமும் காலை வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிகவும் பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிப்பொழிவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சிலர் கடும் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி அதன் மூலம் சற்று குளிர்காய்ந்து வருவதையும் காண முடிகிறது.
Related Tags :
Next Story