இன்று வருகை தரும் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்ட 2 பேர் கைது


இன்று வருகை தரும் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2018 10:26 PM GMT (Updated: 17 Dec 2018 10:26 PM GMT)

இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வருகிறார். மேலும் நவிமும்பை, புனேயில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்தநிலையில், பிரதமரின் வருகையை எதிர்த்து கல்யாணில் அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என வினய் துபே என்பவர் முகநூலில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. எனவே தான் கருப்பு கொடி காட்ட முடிவு செய்து உள்ளோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வினய் துபேயையும், அவரது கூட்டாளி யோகேந்திர திரிபாதி என்பவரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் வினய் துபே, உத்தர் பாரதிய மகா பஞ்சாயத்து என்ற வட இந்திய அமைப்பின் தலைவர் என்பது தெரியவந்தது.

உத்தர் பாரதிய மகா பஞ்சாயத்து அமைப்பு சார்பில் தான், மும்பை காந்திவிலியில் நவநிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே கலந்துகொண்டு பேசிய பொதுக்கூட்டம் அண்மையில் நடந்தது. அப்போது, நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் பல பிரதமர்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அப்போது, அங்கு வேலை வாய்ப்பை பெருக்க நீங்கள் ஏன் அவர்களிடம் கேட்கவில்லை. மும்பையில் வேலை வாய்ப்பு உள்ளது போல ஏன் உங்கள் மாநிலத்தில் வேலை வாய்ப்பு இல்லை என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பிரதமருக்கு அவர்கள் கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில், பிரதமரின் நிகழ்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டோம் என அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததின் பேரில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story