மணல் திருட்டை முற்றிலும் தடுக்க வேண்டும்; போலீசாருக்கு, கவர்னர் அதிரடி உத்தரவு
தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் திருடப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று பாகூர் போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
பாகூர்,
புதுவை மாநிலம் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம்,மற்றும் குருவிநத்தம் பகுதியில் அமைந்துள்ள தென்பெண்னை ஆற்றில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிப்பர் லாரிகள் மூலமாக மணல் திருடப்பட்டு வந்தது. இந்த மணல் திருட்டை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அதன் காரணமாக தற்போது மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் சிலர் தண்ணீரில் மூழ்கி மணல் அள்ளி வந்து அதனை பதுக்கி வைத்து மாட்டு வண்டிகளின் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதோடு, கொமந்தான்மேடு தென்பெண்னையாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி மணல் கடத்தப்பட்டது. இதனை வருவாய் துறை மற்றும் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கவர்னர் கிரண்பேடி நேற்றுக்காலை பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு போலீசார் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அனைத்து நடவடிக்கையும் முறையாக கணினியில் பதிவு செய்யப்படுகிறதா? என்றும் மணல் கொள்ளை சம்மந்தமான வழக்குகளின் நிலை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் காவல் நிலைய எழுத்தர் அறை, ஆயுதக்கிடங்கு, சிறை, காவலர் ஓய்வு அறைகளை பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் கவர்னர் கிரண்பெடி பேசுகையில் ‘‘மணல் திருட்டை முழுமையாக ஏன் தடுக்க முடியவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும் மணல் திருட்டு தடுப்பு நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை எனவும் கூறினார்.
மணல் திருட்டை தடுக்கும் வகையில், தற்போது 3 ஆக உள்ள பீட் ஆபிசர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும். வரும் 2019 ஆண்டில் மணல் திருட்டு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மணல் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கிய கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின்போது, போலீஸ் ஐ.ஜி.சுரேந்திரசிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகேணஷ், தாசில்தார் கார்த்திகேயன், மணல் தடுப்பு பிரிவு துணை தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
இதனிடையே கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’கோ–பேக் கிரண்பேடி’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பேனர் வைக்கப்பட்டிருந்ததால் பாகூரில் பரபரப்பு ஏற்பட்டது.