மதுரையின் வரப்பிரசாதம் எய்ம்ஸ்


மதுரையின் வரப்பிரசாதம் எய்ம்ஸ்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:26 PM GMT (Updated: 17 Dec 2018 11:26 PM GMT)

மதுரை தோப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருப்பது, தென்மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனைத்துவித சிகிச்சைகளுக்கான வசதிகள் இருந்தாலும் கூட, சில கட்டமைப்பு வசதிகள் தரம் வாய்ந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை. மேலும், தென்மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான அதிதீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகள் மதுரைக்கு கொண்டு வரப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்க தேவையான வசதிகள் ராஜாஜி ஆஸ்பத்திரியில் கிடையாது.

இந்த நிலையில், மருத்துவ துறையில் சர்வதேச தரம் வாய்ந்த சிகிச்சைக்கு பெயர் பெற்ற, மத்திய அரசு ஆஸ்பத்திரியான எய்ம்சின் வருகை மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும்.

இதற்காக மதுரை தோப்பூரில் 197 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் முற்றிலும் அரசுக்கு சொந்தமான நிலமாக இருப்பதால், நிலம் கையகப்படுத்துதல் போன்ற பிரச்சினை கிடையாது. அத்துடன், இந்த இடம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்கனவே கொண்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த திட்டத்துக்காக சில நிபந்தனைகளுடன் மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நிபந்தனையில் முக்கியமானது, சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை கூத்தியார்குண்டுக்கு வந்து சேரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெட்ரோல் குழாய்கள் ஆகும். எய்ம்ஸ் அமையஉள்ள இடத்துக்கு மிக அருகில் இந்த பெட்ரோல் குழாய்கள் வருகின்றன. எனவே குழாய்கள் பதிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் இடைவெளிக்குள் கட்டுமான பணிகள், ஆழ்துளை கிணறுகள், குழிகள் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆஸ்பத்திரி கட்டுமான நிறுவனமான எச்.எஸ்.சி.சி. அமைப்பின் என்ஜினீயர்கள் குழு எய்ம்ஸ் அமைவிடத்தை கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்தனர். அவர்களும், எய்ம்ஸ் அமைவிடத்துக்கு முழு மனதுடன் ஒப்புதல் கொடுத்தனர். இதனால், எய்ம்ஸ் அமைவதற்கான நிர்வாக பணிகள் விறுவிறுப்படைந்தது.

எய்ம்ஸ் அமைவிடத்தை பொறுத்தமட்டில், இலந்தைக்குளம் டைடல் பார்க்கில் தொடங்கி, தோப்பூர் வீட்டுவசதிவாரிய துணைக்கோள் நகரம் வழியாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பகுதிக்குள் நுழைந்து விமான நிலையம் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மதுரை-கப்பலூர் நான்கு வழிச்சாலையில் இருந்து 200 அடி அகல ரோடு அமைப்பதற்கான நிலம் தயார்நிலையில் உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

திருமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருப்பரங்குன்றத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் எய்ம்ஸ் அமையஉள்ளது. திருமங்கலம் ரெயில் நிலையத்தில் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் நின்று செல்கின்றன. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் ஒரேயொரு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஒரு சில பாசஞ்சர் ரெயில்களும் நின்று செல்கின்றன. பஸ் போக்குவரத்தை பொறுத்தமட்டில், 4 வழிச்சாலை வரை 24 மணி நேர பஸ் போக்குவரத்து உள்ளது. எனவே போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் எய்ம்ஸ் அமைவது ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயன்கொடுக்கும்.

எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் பகுதியில் சுமார் 260 ஏக்கர் வரை அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. எனவே ஆஸ்பத்திரிக்கு வந்து செல்பவர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தின் அருகே உள்ள நிலத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வரை சென்ட் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை விலைபோன நிலங்கள் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விலை சொல்லப்படுகிறதாம். ஒரு சில பகுதிகளில் ரூ.2 லட்சம் வரை விலை சொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் நில புரோக்கர்கள் படையெடுப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூட, நிலங்களை வாங்குவதற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் விடுதிகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், டீ கடைகள், பெட்டிக்கடைகள், துணிக்கடைகள், பலசரக்கு கடை என பல்வேறு வர்த்தக பயன்பாட்டுக்காக நிலங்கள் வாங்கப்படுகின்றன. எனவே தேவையான வசதிகள் அனைத்தும் ஆஸ்பத்திரி அருகே கிடைத்தால் அதுவும் ஏழை மக்களுக்கு மிகவும் கொடுக்கும்.

Next Story