வியாபாரி வீட்டில் நகை திருடிய கொத்தனார் உள்பட 2 பேர் சிக்கினர்
கம்பத்தில் கவரிங் நகை கடை வியாபாரி வீட்டில் நகையை திருடிய கொத்தனார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்,
கம்பம் காளவாசல் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 58). இவர் வேலப்பர் கோவில் தெருவில் கவரிங் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சி என்னுமிடத்தில் முத்தாரம்மன் கோவில் விழாவிற்கு சென்றார். பின்பு 3 நாட்கள் பிறகு வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு பீரோவில் இருந்த 34 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தனர்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர் களை தேடி வந்தனர். மேலும் திருட்டு சம்பவம் தொடர்பாக மோப்ப நாய் மூலம் சோதனை செய்தபோது அதே பகுதியில் உள்ள சமையல் மாஸ்டராக வேலை பார்க்கும் ஈஸ்வரன் என்பவருடைய வீட்டின் முன்பு சிறிது நேரம் நின்றது.
இதனை தொடர்ந்து அவரின் செயல்பாடுகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில் சந்தேகமடைந்த போலீசார் ஈஸ்வரனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவரும், அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் வேல்முருகனும் சேர்ந்து சுதாகர் வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story