20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 18 Dec 2018 6:50 PM GMT)

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் தேரடி அருகே நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் பிரகாஷ்பாலாஜி, மாவட்ட பொருளாளர் ஜோதிபிரகாசம், மாவட்ட இணை செயலாளர் நல்லி கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் திருமால் ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்கள்.

அப்போது 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணை மூலம் அனைவருக்கும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்தில் தங்கவேண்டும் என்ற உத்தரவினை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஊர்வலத்தை முடித்துவிட்டு, பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்தார்கள். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story