நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீர் நிறுத்த முடியும். பவானிசாகர் அணையில் இருந்து பிரிக்கப்படும் கீழ்பவானி வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2½ ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையையும் பவானிசாகர் அணை தண்ணீர் பூர்த்தி செய்கிறது. இதுமட்டுமின்றி பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.
நீலகிரி மாவட்ட மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு மழை பொழியும் போதெல்லாம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
கடந்த 5 மாதங்களுக்கு முன் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு பெருமளவு தண்ணீர் வந்தது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதன்பின்னர் பாசனத்துக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் மெல்ல நீர் மட்டமும் குறைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 20–ந் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து சரிந்தது. ஆனாலும் தொடர்ந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த சிலநாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லை. அதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 95.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,012 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது.
நேற்று காலை 8 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 612 கன அடியாக குறைந்தது. அதனால் அணையின் நீர்மட்டமும் 95.31 அடியாக சரிந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.