கஜா புயல் பாதிப்பு: சேத விவர இறுதி அறிக்கையை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை - எச்.ராஜா பேட்டி


கஜா புயல் பாதிப்பு: சேத விவர இறுதி அறிக்கையை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை - எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதிப்பு சேத விவரங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்று எச்.ராஜா கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை,

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதி, 750 படுக்கை வசதிகள், 15 சிறப்பு பிரிவுகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள், 60 செவிலியர் இடங்கள் உருவாகும்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருப்பது கண்டனத்துக்குரியது. பொதுமக்கள் அவரது பேச்சை விரும்பவில்லை. சோனியாகாந்தியை அழைத்து சிலையை திறக்க செய்தது சரியல்ல. கடந்த 2 வருடங்களாக மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக எதையோ பேசி வருகிறார். அவர் முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார்.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருப்பதாக தகவல்கள் வருகிறது. நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை கேட்க தயங்க கூடாது.

தமிழக பாடத்திட்டத்தில் தமிழர்களின் தொன்மையை அழித்து வருகிறார்கள். தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடர் இயக்கத்தினர் தமிழை அழிக்கிறார்கள். தொன்மை வாய்ந்த பாட திட்டத்தை மாற்றி உள்ளனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி பாட திட்டத்தில் இல்லை. மொகலாயர் படையெடுப்புக்கு பின்னர் உள்ள செய்திகள்தான் பாட புத்தகத்தில் உள்ளது. இந்தியா என் தாய் நாடு என பாட புத்தகத்தில் இருந்தது. அதை இந்தியா என் நாடு என மாற்றி விட்டனர். தாய் நாடு என்பதை எடுத்தது தேச துரோகம்.

இந்து அறநிலையத்துறை வெட்கக்கேடான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 44,190 கோவில் களில் 8 ஆயிரம் கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. சிலைகளை காக்க இந்து அறநிலையத்துறை தவறி விட்டது. சிலைகளை மீட்பதாக கூறுகிறார்கள். இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருக்கும்போது தானே சிலைகளும் திருட்டு போய் உள்ளது. இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளை கைது செய்து ஜாமீனில் விட்டுள்ளனர். அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், இளைஞர்களை தூண்டிவிட்டு ஆலையை திறக்க கூடாது என்று போராட்டம் நடத்துவது இளைஞர்களுக்கு விரோதமான செயல்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி வரவில்லை என்று கூறுகிறார்கள். புயலால் பாதிக் கப்பட்ட உடன் பிரதமர் மோடி டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து இருந்தார். அவர், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார். மத்திய குழுவும் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புயல் பாதித்த பகுதியில் ரூ.6,300 கோடி செலவில் மத்திய அரசு சார்பில் வீடுகள் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசிடம் உள்ள ரூ.1217 கோடி இயற்கை பேரிடர் நிதியை கஜா புயல் பாதிப்புக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். தமிழக அரசு கஜாபுயல் பாதிப்பு சேத விவரங்கள் தொடர்பான இறுதிஅறிக்கையை இன்னும் மத்திய அரசிடம் வழங்க வில்லை. அறிக்கை வந்த பின்னர் நிதி வழங்கப்படும்.

5 மாநில தேர்தல் முடிவால் எந்த பிரச்சினையும் இல்லை. இது சட்டமன்ற தேர்தல் முடிவு. நாடாளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ‘நடிகர் சிம்பு பாடிய ஒரு பாடலில் உங்களை விமர்சனம் செய்து உள்ளதாக கூறப்படுகிறதே?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எச்.ராஜா பதில் அளிக்கும் போது, ‘என்னை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேச பக்தி, இந்து மதத்துக்கு எதிராக யார் பேசினாலும் நான் பதில் சொல்வேன். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்’ என்றார்.

Next Story