கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை - மர்ம கும்பல் அட்டகாசம்


கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை - மர்ம கும்பல் அட்டகாசம்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கச்சிராயப்பாளையம், 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் சத்தியராஜ்(வயது 30), டிரைவர். இவர் கச்சிராயப்பாளையத்தில் உள்ள ஒரு பிரபல டாக்டரிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும் அந்த டாக்டருக்கு சொந்தமாக கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்தூர் கிராம எல்லையில் பங்களாவுடன் கூடிய 10 ஏக்கர் விளை நிலத்தை சத்தியராஜ் குத்தகைக்கு எடுத்து தனது குடும்பத்தினருடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை சத்தியராஜ், டாக்டருடன் சேலம் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான சுகுணா(26), சத்தியராஜியின் தாய் கண்ணகி(40), தங்கை தனலட்சுமி(25), சித்தப்பா ஏழுமலை ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இரவு 9.30 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் சத்தியராஜ் வீட்டுக்கு வந்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது. மர்ம கும்பலை சேர்ந்த 2 பேர் வீட்டு முன்பு மறைவாக நின்று கொண்டனர். மீதமுள்ள 5 பேர் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர்.

அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த கண்ணகி, தனலட்சுமி, ஏழுமலை ஆகியோரை சரமாரியாக தாக்கி, அவர்களை கயிற்றால் கட்டிப்போட்டனர். கர்ப்பிணியான சுகுணாவையும் அவர்கள் ஒரு கயிற்றால் கட்டிப்போட்டார்கள். பின்னர் அவர்கள் ஒரு அறையில் இரும்புபெட்டியில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

அந்த சமயத்தில் சுகுணா செல்போன் மூலம் தனது கணவருக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சத்தியராஜ் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து அவர் குதிரைச்சந்தல் கிராமத்தில் தனது உறவினர் பாண்டியன் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அதேநேரத்தில் கொள்ளை கும்பல் நகை, பணம் மற்றும் வீட்டில் இருந்த பென்டிரைவ், மெமரிகார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே தகவல் அறிந்த பாண்டியன் தனது உறவினரான கண்ணன் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சத்தியராஜ் வீட்டுக்கு வந்தார். இதைப்பார்த்த வெளியே நின்ற கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், சத்தியராஜ் வீட்டுக்குள் 2 பேர் வருவதை உள்ளிருந்த தங்களது கூட்டாளிகளுக்கு தெரிவித்தனர்.

இதனால் உஷாரான கொள்ளை கும்பல், வீட்டிற்குள் நுழைந்த பாண்டியன் மற்றும் கண்ணனை தாக்கி அவர்களையும் கயிற்றால் கட்டிப்போட்டனர்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கர்ப்பிணியான சுகுணாவுக்கு கொள்ளை கும்பல் குடிக்க தண்ணீர் கொடுத்ததோடு, உன்னை லேசாகதான் கட்டியுள்ளோம். நாங்கள் சென்றவுடன் நீ கயிற்றை அவிழ்த்து, மீதமுள்ள 5 பேரையும் விடுவித்துவிடு என்று கூறிவிட்டு, பாண்டியனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

நல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பாண்டியனின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போனதால், பஸ் நிறுத்தம் அருகே அந்த மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு சென்றனர்.

கொள்ளை கும்பல் சென்றதும், சுகுணா கயிற்றை அவிழ்த்துக் கொண்டு மீத முள்ள அனைவரையும் விடுவித்தார். மேலும் இந்த கொள்ளை சம்பவம் பற்றி சுகுணா கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த கண்ணகி, தனலட்சுமி, ஏழுமலை, பாண்டியன், கண்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனிடையே கொள்ளை நடத்த வீட்டுக்கு மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் குமார் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கர்ப்பிணி பெண் உள்பட 6 பேரை கட்டிப்போட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story