கோவை அருகே துப்பாக்கியுடன் திரிந்த போலி போலீஸ் அதிகாரி சிக்கினார்
கோவை அருகே துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த போலி போலீஸ் அதிகாரியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரூர்,
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கு நேற்று காலை ஒரு டிப்-டாப் ஆசாமி வந்தார். அவர் கைத்துப்பாக்கி வைத்திருந்தார். பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவது போல அங்கும், இங்கும் நடந்து சென்று கொண்டிந்தார். அவர் கைத்துப்பாக்கி வைத்துக் கொண்டு நடந்து சென்றது அவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பல்பொருள் அங்காடி உரிமையாளரிடம் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததுடன் மத்திய புலனாய்வு போலீஸ் பிரிவில் (ஐ.பி.) வேலை பார்ப்பதாக தெரிவித்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் தனது பெயர் விஜயராமன் அய்யர் (வயது 48) என்றும், சொந்த ஊர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்றும் தெரிவித்தார். நீண்ட நாட்கள் மும்பையில் வசித்து வந்ததாகவும், 3 வருடத்துக்கு முன் தொண்டாமுத்தூர் வந்ததாகவும் கூறினார். மனைவி பிரிந்து சென்றதால் தனது தாயார் பானுமதியுடன் வசித்து வருவதாக அவர் கூறினார். பானுமதி ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
விஜயராமன் அய்யரிடம் இருந்து மத்திய புலனாய்வு போலீஸ் பிரிவில் (ஐ.பி.) அதிகாரியாகவும், ரஷிய உளவு பிரிவு போலீசாகவும் வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டைகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். விசாரணையில் அந்த அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்துள்ளது.
விஜயராமன் அய்யர் வைத்திருந்த கைத்துப்பாக்கி ஏர்கன் ஆகும். இது பறவைகளை சுடுவதற்கு பயன்படுத்தக்கூடியது. பொதுமக்கள் பார்வையில்படும் வகையில் ஏர்கன் வைத்திருந்து பயத்தை ஏற்படுத்தியது ஏன்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஜயராமன் அய்யரின் தாயாரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விஜயராமன் அய்யர் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்து யாரையெல்லாம் மிரட்டினார் என்று விசாரணை நடத்தப்பட்டது. ஏர்கன் துப்பாக்கி, தோட்டாக்கள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story