வீடு கட்டிக் கொடுப்பதாக வக்கீலிடம் மோசடி: வங்கி மேலாளர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுப்பதாக வக்கீலிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து வங்கி மேலாளர்கள் 2 பேர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனியை அடுத்துள்ள அரண்மனைப்புதூர் வசந்தநகரை சேர்ந்த காமராஜ் மகன் பிச்சைமணி (வயது 32). இவர் வக்கீலாக உள்ளார். அவருக்கு அதே ஊரைச் சேர்ந்த விவாகர் மனைவி கற்பகம், பொம்மையன் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் இருவரும் நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் குறைந்த செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதற்கு வங்கிக் கணக்கு தொடங்கி தங்களுக்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய பிச்சைமணி தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி ரூ.10 ஆயிரம் பணம், ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் பூர்த்தி செய்யாத 2 வங்கி காசோலைகள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்டு 1,158 சதுரஅடி நிலத்தை அவருடைய பெயருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
பின்னர், அவர்கள் இருவரும் பிச்சைமணியை அழைத்து சென்று திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில், வீடு கட்டுவதற்கு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் பிச்சைமணியின் வங்கிக் கணக்கில் பணம் வரவு ஆகவில்லை. இதுகுறித்து அவர் வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, கடன் தொகை 3 தவணைகளாக மொத்தம் ரூ.46 லட்சம் கற்பகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதுதொடர்பாக கற்பகம், பொம்மையன் ஆகியோரிடம் அவர் கேட்ட போது, வீடு கட்டி வருவதாக வரைபடத்தை காண்பித்துள்ளனர். ஆனால், 939 சதுர அடியில் தான் வீடு கட்டுவதாகவும், அதுவும் முழுமை பெறாமல் உள்ளதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிச்சைமணி மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில், கற்பகம், பொம்மையன், திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள வங்கி கிளை மேலாளர்கள் துர்கா, புஷ்பலதா ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story