ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் ஊர்வலம்


ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என முத்துப்பேட்டையில் நடந்த ஊர்வலத்தில் தென்னை விவசாயிகள் வலியுறுத்தினர்.

முத்துப்பேட்டை,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது.

இதையொட்டி புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஒரு மினிலாரியில் புயலில் விழுந்த தென்னை மரத்தை வைத்து மலர் மாலை அணிவித்து, விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதை முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கையில் தென்னை குருத்துகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

பல்வேறு வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் கருணாநிதி, பொருளாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன், ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ரெங்கசாமி, த.மா.கா. மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story