கீழ்வேளூர் அருகே நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


கீழ்வேளூர் அருகே நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் அருகே உள்ள ஆழியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆழியூர், பாமணி, கடம்பர வாழ்க்கை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் இதுவரை எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுகொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று நாகை - திருவாரூர் மெயின் சாலை ஆழியூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story