ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் பாலகிருஷ்ணன் பேட்டி


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி அரசுக்கு எந்த கவலையும் இல்லை. மேகதாது மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் 2 மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை. ஆனால் மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு மட்டும் அனுமதி வழங்குவதை ஏற்க முடியாது. எனவே மேகதாது பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லை பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைப்பிடிக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் விசாரணை மட்டும் அல்ல, ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது உள்பட பல்வேறு விசாரணைகள் நடந்து வருகின்றன. அப்படி இருக்க அவர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்து இருக்கிறார். பொதுவாக தேர்தலுக்கு பின்னர் தான் பிரதமரை தேர்வு செய்வது பற்றி யோசிப்பார்கள். எனவே தேர்தல் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

நிலத்தடி நீரை பயன்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சாதாரண மக்கள் நிலத்தடி நீரை உபயோகிக்க வரி செலுத்த வேண்டி உள்ளது. இது மத்திய அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கை ஆகும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஆலையை திறக்க விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story