கறம்பக்குடியில் துணிகரம்: வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


கறம்பக்குடியில் துணிகரம்: வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 20 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் அடுத்தடுத்து வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செட்டியார் தெருவில் முகமது அன்சாரி, ஜேம்ஸ், சந்திரசேகரன், சுப்பிரமணியன் ஆகியோர் முறையே எலக்ட்ரிக்கல்ஸ், அரிசிகடை, உரக்கடை, பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடைகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.40 ஆயிரம், உரக்கடையில் ரூ.40 ஆயிரம், அரிசி, பெட்டிக்கடைகளில் தலா ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து அந்த கடைகளின் உரிமையாளர்கள் கறம்பக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசார், அரிசி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல கறம்பக்குடி தட்டாரத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 35). இவர் வெளியூர் சென்றுவிட்டதால் அவரது மனைவி கைக்குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.

இதே தெருவில் வசிக்கும் அன்பழகன் என்பவர் வீட்டிலும் யாரும் இல்லாதபோது பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து வீடுகள் மற்றும் கடைகளில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரேநாள் இரவில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story