தார் சாலை அமைத்ததில் குறைபாடு: என்ஜினீயர், ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் எச்சரிக்கை


தார் சாலை அமைத்ததில் குறைபாடு: என்ஜினீயர், ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் பகுதியில் புதிதாக அமைக்கும் தார் சாலையில் குறைபாடு இருந்ததை கண்டறிந்த கலெக்டர் ராஜாமணி என்ஜினீயர், ஒப்பந்ததாரரை எச்சரிக்கை செய்தார்.

துறையூர்,

துறையூர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார். துறையூரில் உள்ள பகளவாடி ஊராட்சிக்குட்பட்ட நல்லவன்னிபட்டி, சித்திரைநகர் ஆகிய பகுதிகளில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து கோவிந்தபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் மதிப்பிலான சிமெண்டு கான்கிரீட் தடுப்பணையை பார்வையிட்டார். மேலும் சிக்கத்தம்பூர்பாளையம் முதல் கோணப்பாதை வரையிலான, பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரூ.64 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான 1,850 மீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையை பறித்து ஆய்வு செய்தபோது 15 இன்ஞ் உயரம் இருக்க வேண்டிய சாலைக்கு பதிலாக வெறும் 8 இன்ஞ் மட்டுமே சாலை அமைக்கப்பட்டு இருந்தது. குறைபாட்டை கண்டறிந்த கலெக்டர் ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட என்ஜினீயரை அழைத்து முறையான சட்ட விதிகளுக்கு உட்பட்டு சாலை அமைக்குமாறு எச்சரித்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் கலெக்டர் ராஜாமணி கூறுகையில்,“பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த துறையூர் தாலுகா அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. மருங்காபுரியில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இதைபோல் லால்குடியிலும் கேட்கப்பட்டுள்ளது. தற்போது துறையூரிலும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, துறையூரில் பழைய தாலுகா அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் பரதநாட்டிய பயிற்சியை பார்வையிட்ட கலெக்டர், அங்கு பரதநாட்டியம் பயிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்தினார். அப்போது அவரிடம் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், துறையூர் தாசில்தார் ரவிசங்கர், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகுந்தலா, ஜெசிந்தா, ஒன்றிய பொறியாளர்கள் ராமு, கீதாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story