பிளஸ்-2 அரையாண்டு தேர்வு: செல்போன் செயலியில் முன்கூட்டியே வெளியான வினாத்தாள்
பிளஸ்-2 அரையாண்டு தேர்வு வினாத்தாள், செல்போன் செயலியில் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வரு கிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு உள்பட 5 பாடத்துக் கான தேர்வுகள் நடந்தன.
இதில் உயிரியல் தேர்வுக் கான வினாத்தாள் நேற்று முன்தினம் இரவே, ‘ஷேர் சேட்’ என்ற செல்போன் செயலியில் வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான மாணவர்கள் அந்த வினாத்தாளை பார்த்தனர். வினாத்தாள் செயலியில் வெளியானது குறித்து நேற்று காலையில் தான் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எங்கிருந்து வினாத்தாள் வெளியானது? அதனை வெளியிட்டது யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. பிளஸ்-2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 உயிரியல் பாடத்துக்கான வினாத்தாள் வெளியானது குறித்து இன்று (நேற்று) காலையில் தான் தெரியவந்தது. செயலியில் வெளியான வினாத்தாளையும், தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளையும் ஒப்பிட்டு பார்த்தபோது, அது இரண்டும் ஒன்று தான். ஆங்கில மொழியில் உள்ள தேர்வுத்தாள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, தேர்வுகளுக்காக பள்ளிகள் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளன. 3 பகுதிகளுக்கும் தனித்தனி வினாத்தாள்கள் தான் தயாரிக்கப்படுகிறது. இதில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, காஞ்சீபுரம் உள்பட 10 மாவட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு காஞ்சீபுரத்தில் தான் அனைத்து தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் அச்சடிக்கப்பட்டு, அந்ததந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தேர்வுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வினாத்தாள்கள் வந்துவிடும். பிளஸ்-1, பிளஸ்-2 வினாத்தாள்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வினாத்தாள்களை பத்திரமாக வைக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மைய பொறுப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து, தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாள்களை எடுத்துச்சென்று பாதுகாப்பான அறையில் வைத்து அதற்கு ‘சீல்’ வைக்கப்படும்.
தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும். ஆனால் இந்த உயிரியல் தேர்வுக்கான வினாத்தாள் எப்படி வெளியானது? என்று தெரியவில்லை. இதுகுறித்து சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story