சிறந்த கடிதம் எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒருநாள் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்


சிறந்த கடிதம் எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒருநாள் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 9:19 PM IST)
t-max-icont-min-icon

சிறந்த கடிதம் எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒருநாள் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் ‘என் கனவு’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,508 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் டானிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். சார்பு நீதிபதி ராஜ்மோகன், முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீராம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி லட்சுமி, அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

பெண் குழந்தைகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாக எடுத்துரைக்கும் வகையில் இந்த சாதனை நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது. முந்தைய காலத்தில் பெற்றோர்கள், பிள்ளைகளிடையே கடித தொடர்பு இருந்தது. இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவிகள் உங்களது பெற்றோர்களுக்கு உங்கள் எண்ணங்கள், ஆசைகள், சமமாக நடத்துவது, உயர்கல்வி படிக்க வைப்பது, குழந்தை திருமணம் செய்யக்கூடாது என்பன குறித்து தபால் அட்டையில் எழுதலாம்.

இங்கு எழுதப்படும் கடிதங்களில் சிறந்த முறையில் நன்றாக எழுதியுள்ள கடிதங்களில் 25 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு என்னுடன் காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

பெற்றோர்களுக்கு நான் கூறுவது பெண் குழந்தைகளை வீட்டில் சமமாக நடத்துங்கள், அப்போது தான் அவர்களும் சமுதாயத்தில் அனைவரிடமும் சமமாக இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாணவிகள் கலெக்டர், நீதிபதிகள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தபால்துறை மூலமாக ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தின் பாஸ் புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story