மேட்டூர் அணை நீர்மட்டம் 95.42 அடியாக குறைந்தது 16 கண் மதகு பகுதி வறண்டது


மேட்டூர் அணை நீர்மட்டம் 95.42 அடியாக குறைந்தது 16 கண் மதகு பகுதி வறண்டது
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-20T22:01:21+05:30)

மேட்டூர் அணை நீர்மட்டம் 95.42 அடியாக குறைந்தது. இதனால் 16 கண் மதகு பகுதி வறண்டு காணப்படுகிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை அளவு மிகவும் குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு பல மடங்கு குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 95.56 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 95.42 அடியாக குறைந்தது.


மேட்டூர் அணைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி 4 முறை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டது. இதனால் மதகு பகுதியில் தண்ணீர் சூழ்ந்து இருந்தது.

தற்போது அணை நீர்மட்டம் 95.42 அடியாக குறைந்து உள்ளதால் 16 கண் மதகு பகுதியில் தண்ணீர் குறைந்து வறண்டு காணப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்தால் தான் அணை நீர்மட்டம் உயரும்.

Next Story