நாமக்கல் ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


நாமக்கல் ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 4:40 PM GMT)

நாமக்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


நாமக்கல், 

நாமக்கல் தாலுகாவில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடக்கமாக நல்லிபாளையம் ரேஷன்கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கு பொருட்களின் இருப்பு, விற்பனை, விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை இயக்கி சரிபார்த்தார்.

இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விவரம் குறித்தும், விற்பனை முனைய கருவியில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்றும் சரிபார்த்தார்.

அதை தொடர்ந்து நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன்கடைகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் செயல்பட்டு வரும் பொன்னி ரேஷன்கடை ஆகியவற்றில் அரிசி, மண்எண்ணெய், சர்க்கரை, பாமாயில், கோதுமை ஆகிய குடிமைப் பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர் களின் துணையுடன் சரிபார்த்தார்.

இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா? விற்பனையாளர் சரியாக வருகின்றாரா? என்றும் கேட்டறிந்தார். மேலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும்் முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் சந்திரமாதவன் உள்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story