சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை முத்துசாமி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் ரம்யா (வயது 18). இவர் சேலம் செரி ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யாவின் தாயார் வீட்டு வேலைகளை சரியாக செய்து, பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ரம்யா கோபித்துக் கொண்டதாக கூறப் படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் அவர் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் அஞ்சலி (18). இவர் அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அஞ்சலி விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அஞ்சலியை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story