தஞ்சையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


தஞ்சையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை மறுசீரமைப்பு செய்து அதிக பணியிடங்களை அறிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே வழங்க வேண்டும்.

பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவரவர் சொந்த மாவட்டத்தில் பணி புரியும் வகையில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சான்றுகள் வழங்கும் பணி, பயிர் சேதம் கணக்கெடுப்பு பணி போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.


இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்றுகாலை தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் சுரேஷ், துணைத்தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் உலகநாதன், செயலாளர் பாண்டியன், பொருளாளர் வசந்தகுமார் மற்றும் வட்ட தலைவர்கள் பத்மநாபன், விமலா, ராஜேஷ்கண்ணா, தனசெல்வம், மகரஜோதி, ரத்னவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் அம்மா திட்ட செலவின தொகையை வழங்க வேண்டும். மாறுதல் கேட்டு மனு செய்துள்ளவர்களுக்கு உடனடியாக மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் வட்ட தலைவர்கள் சாமிநாதன், ஜீவானந்தம், ரமேஷ்குமார், வெங்கடேசன், அன்பரசன், ரவிச்சந்திரன், பிரபாகரன், அருண்பிரகாஷ் மற்றும் வட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story