தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 5:20 PM GMT)

தஞ்சையில் 3–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 18–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது.

கமலேஷ்சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக கடந்த 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும் கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் பணிநிறைவு பெற்ற அனைவருக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும். நிலுவைத்தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுச் சந்தாவை மாதம் ரூ.500 ஆக மாற்றி குழுக்காப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பணி மாறுதல் வரையறையை தளர்த்த வேண்டும். விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு ஊதிய குறைப்பு செய்யக் கூடாது.


ஊதியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று வகையிலான விருப்பு ஓய்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story