ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.72 ஆயிரம் திருட்டு ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.52 ஆயிரத்தையும் சுருட்டினர்


ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.72 ஆயிரம் திருட்டு ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.52 ஆயிரத்தையும் சுருட்டினர்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் பையை திருடி ரூ.72 ஆயிரத்தை எடுத்துக்கொண்ட மர்ம நபர்கள், பையில் இருந்து ஏ.டி.எம்.கார்டை எடுத்து அதன் மூலம் ரூ.52 ஆயிரத்தையும் சுருட்டி சென்று விட்டனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி,

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கட்ரமணன்(வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தற்போது என்.சி.சி. மற்றும் சாரணர் இயக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வெங்கட்ரமணன், ராமநாதபுரத்தில் பயிற்சி அளித்து விட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது பஸ்சில் வைத்து யாரோ சில மர்ம மனிதர்கள் அவர் வைத்திருந்த பையை திறந்து அந்த பைக்குள் அவர் வைத்திருந்த மற்றொரு சிறிய பையை திருடிக்கொண்டு நைசாக பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டனர். அந்த பையில் வெங்கட்ரமணன் ரூ.72 ஆயிரம் மற்றும் தனது ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியாத வெங்கட்ரமணன், திருத்துறைப்பூண்டியில் பஸ்சில் இருந்து இறங்கினார். பின்னர் அங்கு மறைந்த தனது நண்பரான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செல்லத்துரை வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் வெங்கட்ரமணன் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 3 முறை மொத்தம் ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே ஏ.டி.எம். கார்டு மூலம் திருவாரூரில் உள்ள ஒரு கடையில் இருந்து ரூ.22 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியதாகவும் குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தான் வைத்திருந்த பையை திறந்து பார்த்தார். அப்போது அந்த பைக்குள் தான் வைத்திருந்த சிறிய பையை காணாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வெங்கட்ரமணன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், பஸ்சில் வைத்து தனது பை திருட்டுப்போனதாகவும் அதில் ரூ.72 ஆயிரம் மற்றும் தனது ஏ.டிஎம். கார்டு ஆகியவை இருந்ததாகவும்கூறி உள்ளார்.

இந்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பணம் இருந்த பையை திருடி சென்றவர்களை வலைவீசிதேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1¼ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story