திருச்சியில், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் சாவு


திருச்சியில், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் சாவு
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 21 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காவிரி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக இறந்தார். அவர் நண்பருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கினார்.

திருச்சி,

திருச்சி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் முனியசாமி. இவர் திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இத்தம்பதிக்கு 2 மகன்கள். இதில் 2-வது மகன் ரிஷிகுமார் (வயது 19), திருச்சி பஞ்சப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஜெயபாலாஜியுடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சாமிதரிசனம் செய்துவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினர்.

திருச்சி காவிரி பாலத்தில் இரவு 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிள் வந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பாலத்தின் குறுக்கே திரும்ப முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளில் திடீர் பிரேக் போட்டு வேகத்தை குறைக்க ரிஷிகுமார் முயன்றார். அப்போது காவிரி பாலத்தில் ரிஷிகுமாரும், அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளுடன் சறுக்கி சென்றவாறு கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் ரிஷிகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயபாலாஜி லேசான காயமடைந்தார். இருவரும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரிஷிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரிஷிகுமார் மரணச்செய்தி அறிந்ததும் கல்லூரியில் படிக்கும் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவருடைய உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை ரிஷிகுமார் உடல் அவருடைய பெற்றோர்-உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story