மின்சாரம் பாய்ந்து இறந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்தியது எப்படி? கைதான 2 பேர் வனத்துறையினரிடம் நடித்து காட்டினர்


மின்சாரம் பாய்ந்து இறந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்தியது எப்படி? கைதான 2 பேர் வனத்துறையினரிடம் நடித்து காட்டினர்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 7:42 PM GMT)

மின்சாரம் பாய்ந்து இறந்த யானையின் தந்தங்களை வெட்டிக் கடத்தியது எப்படி? என்று கைதான 2 பேர் வனத்துறையினரிடம் நடித்து காட்டினர்.

கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம் சுருளியாறு மின்நிலையம் அருகே உடுப்பியாறு ஓடை பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா (வயது 37), பிரபு (34) ஆகியோரை கேரள மாநிலம் குமுளியில் வைத்து பெரியாறு புலிகள் காப்பக வனத்துறையினர் கைது செய்து பீர்மேடு சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த இடம், தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயம் என்பதால் கைதான 2 பேரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேரள மாநிலம் பீர்மேடு கோர்ட்டில், தமிழக வனத்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும், கம்பம் வனத்துறையினர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

யானை தந்தங்களை அவர்கள் எப்படி வெட்டி எடுத்தார்கள் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக சம்பவ இடத்துக்கு 2 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். மாவட்ட வனக்காப்பாளர் கலாநிதி, உதவி வன பாதுகாவலர் குகனேஷ், வனகுற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளர் மதிவாணன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர்.

வனப்பகுதியில் யானை இறந்து கிடந்த இடத்தில், அதன் தந்தங்களை வெட்டி எடுத்தது குறித்து வனத்துறையினரிடம் 2 பேரும் நடித்து காட்டினர். இதற்கிடையே கைதான கங்கா, பிரபு ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்கள் காவலுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் அவர்கள் உத்தமபாளையம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Next Story