பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேர் சிறையில் அடைப்பு


பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 10:30 PM GMT (Updated: 20 Dec 2018 8:07 PM GMT)

பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அசோகன். இவருக்கு சொந்தமான பெரம்பலூர் கல்பாடி பிரிவு ரோட்டில் உள்ள வீட்டிலும், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு அரசு ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்தும் அசோகன் மகன் கார்த்திக் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக் கால் பகுதியை சேர்ந்த உமாகாந்த், நித்யானந்த், வினோத்குமார் ஆகியோர் போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கல்பாடி பிரிவு ரோட்டில் அந்த வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி போலி மதுபானம் தயாரித்த கார்த்திக், உமாகாந்த், நித்யானந்த், வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டிலும், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வீட்டிலும் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான போலி மதுபானம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட கார்த்திக், உமாகாந்த், நித்யானந்த், வினோத்குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பெரம்பலூரில் கல்பாடி பிரிவு ரோட்டில் உள்ள வீட்டில் கடந்த 1½ மாதங்களாக போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்ததும், விற்பனை படுஜோராக நடந்ததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 15 நாட்களாக போலி மதுபானம் தயாரித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கஜா புயல் பாதிப்பின் போது தஞ்சை பகுதியில் மதுபான கடைகள் (டாஸ்மாக்) அடைக்கப்பட்டிருந்ததால், அந்த பகுதியில் அவர்கள் போலி மதுபானங்களை அதிகமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்திக், உமாகாந்த், நித்யானந்த், வினோத்குமார் ஆகிய 4 பேரை நேற்று மாலை போலீசார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

போலி மதுபானம் தயாரிப்பில் முக்கிய குற்றவாளியான காரைக்கால் பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். கார்த்திக்கேயன் பிடிபட்டால் வேறேங்கும் போலி மதுபான தொழிற்சாலைகள் செயல்படுகிறதா? என்பது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

போலி மதுபானம் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் போலி மதுபானம் டாஸ்மாக் கடைகளில் ஏதும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் டாஸ்மாக் கடைகளிலும் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story