பட்டாசு ஆலைஅதிபர்கள், உரிமையாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டம் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு


பட்டாசு ஆலைஅதிபர்கள், உரிமையாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டம் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 8:20 PM GMT)

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலாளர்கள் இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர்,

சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கடும் நிபந்தனைகளை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பட்டாசு ஆலைகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த 18-ந் தேதி வீடுகளில் தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றியதோடு கருப்புக்கொடி ஏந்தி மாவட்டத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அடுத்த கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலாளர்கள், லாரி அதிபர்கள் உள்ளிட்ட இதனை சார்ந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக பங்கு கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து வாகனங்களில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கலெக்டர் அலுவலக பகுதியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா ஆகியோரது முன்னிலையில் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பட்டாசு ஆலை தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், காத்திருப்பு போராட்டத்தை கைவிடும்படியும் கலெக்டரே சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகம் வந்து மனுவை பெற்றுக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விருதுநகர் வந்து போராட்டம் நடத்துவதில் தொழிலாளர்கள் உறுதியாக இருந்துள்ளனர். அமைதியாக வந்து செல்வோம் என்று கூறியுள்ளனர். மேலும் தங்களது வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் விருதுநகருக்கு வருவதில் உறுதியாக இருந்ததை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் அமைதியான முறையில் விருதுநகருக்கு வந்து மனு கொடுத்து திரும்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பட்டாசு தொழிலில் தொடர்புடைய அனைவரும் இன்று ஒன்று திரண்டு வரும் நிலையில் முன் கூட்டியே போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் இன்று சிவகாசியில் கடை அடைப்பு போராட்டம் நடப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story