இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 21 Dec 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

மின்இணைப்பு வழங்கப்படாத பகுதிகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு பணிகள் முன்னேற்றம் குறித்து அரசு முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகள் சேதம், கால்நடைகள் இழப்பு, தென்னை மரங்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு சேதங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.161 கோடியே 22 லட்சம் பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இன்னும் சில குக்கிராம பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று பொதுமக்களிடம் இருந்து தகவல் வந்ததை தொடர்ந்து, அந்த பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கும் வகையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விவசாய மின் இணைப்புகளுக்காக அமைக் கப்பட்டு இருந்த சுமார் 38 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுவரை 46 சதவீதம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணியில் மாவட்டத்தை சேர்ந்த 1,626 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், கூடுதலாக பிற மாவட்டங்களில் இருந்து மின் பணியாளர்களை கொண்டு விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கென புதிய மின்கம்பங்களும் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

விவசாய மின் இணைப்புகளுடன் சேர்ந்த ஓரிரு பகுதிகள் அல்லது மின்பாதைகள் அமைப்பதற்கு தனிநபர் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மின்இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இந்த பகுதிகளிலும் விரைந்து மின்இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 20 ஆயிரத்து 654 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. கஜா புயல் பாதித்த 7 மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை மேற்கொண்ட சிறப்பான பணியின் காரணமாக இதுவரை எவ்வித நோய் தொற்றும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. 

Next Story