பாம்பன் ரெயில் பாலத்தில் நவீன கண்காணிப்பு கேமரா


பாம்பன் ரெயில் பாலத்தில் நவீன கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 21 Dec 2018 4:00 AM IST (Updated: 21 Dec 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் பாலத்தில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் கடந்த 4-ந் தேதி அன்று சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் செல்வது நிறுத்தப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலுக்குள் 4 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு உறுதிதன்மை அதிகரிக்க கூடுதலாக இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு கருதியும்,தூக்குப் பாலம் வழியாக ரெயில்கள் செல்லும்போதும் அதன் அதிர்வுகளை பற்றி தெரிந்து கொள்ளவும் தூக்கப்பாலத்தில் நேற்று நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.கேமரா காட்சிகள் மைய பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ராமேசுவரம் வரையிலான ரெயில் போக்குவரத்து முழுயையாக நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகள் மண்டபத்தில் இறங்கி அங்கிருந்து அரசு பஸ்கள், கார், வேன்கள் மூலம் வந்து செல்கின்றனர்.இதே போல் ராமேசுவரத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் சுற்றலாபயணிகளும் கார்,வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து மண்டபம் சென்று ரெயிலில் ஏறி செல்கின்றனர். ராமேசுவரம் வரையிலான ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலாபயணிகள் பாதிக்கப்பட்டதுடன் ராமேசுவரம் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வருகிற 24-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிந்து வருகின்ற ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து ராமேசுவரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.எனவே ரெயில் தூக்குப் பாலத்தில் பராமரிப்பு பணிகளை முடித்து ரெயில்பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு மீண்டும் ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story