நூற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும் பயிற்சி முகாமில் விழிப்புணர்வு


நூற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும் பயிற்சி முகாமில் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 21 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

நூற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை, 

நூற்பாலை, ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் வார்டன்களுக்கு கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், ரீடு நிறுவனம் சார்பில் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பயிற்சி முகாம் நடந்தது. பெண்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது குறித்து இந்த முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த பயிற்சியை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் கே.ஜெகதீசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். ரீடு நிறுவன திட்ட மேலாளர் மகேஷ்வரன் வரவேற்றார். பயிற்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட விடுதி பெண் வார்டன்கள் பங்கேற்றனர். இதில் கே.எஸ்.பி.ஜனார்த்தன் பாபு, செல்வமணி, நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறியதாவது:-

நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பலர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். இவர்களில் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு செல்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் வேலைப்பளு காரணமாக மனரீதியாக பல பிரச்சினைகள் சந்திக்கும் சூழல் ஏற்படும். இதனால் அவர்கள் தற்கொலையை நாடுவார்கள். இதற்கு தற்கொலை தீர்வு ஆகாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

கோவை மண்டலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் குடும்ப சூழல், பணிச்சுமை காரணமாக 106 பேர் தற்கொலை செய்து உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 7 பேர் இதுபோன்று தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். தற்கொலை செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதில் இருந்து விடுபடுவது குறித்தும் பெண்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயிற்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் மு.வே.செந்தில்குமார், எஸ்.வேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story