போலீசார் போன்று நடித்து கேரள வாலிபரிடம் பணம் பறிப்பு, ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேர் கைது


போலீசார் போன்று நடித்து கேரள வாலிபரிடம் பணம் பறிப்பு, ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் போன்று நடித்து கேரள வாலிபரை மிரட்டி பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பவித்ரன் என்பவரது மகன் நிவேல் (வயது 25). இவர் சி.ஏ. படித்து விட்டு பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவினர்களான அவினேஷ், விவேக் ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு நரசிங்காபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றனர். அப்போது அங்கு நின்ற 3 பேர் லைட் அடித்து நிவேல் வந்த வாகனத்தை நிறுத்தினார்கள். அதில் ஒருவர் போலீசார் போன்று சீருடை மற்றும் ஷூ அணிந்து இருந்தார்.

காரை விட்டு இறங்கிய நிவேலிடம், குடித்து விட்டு காரை ஓட்டுகிறாயா? என்று மிரட்டும் தோணியில் பேசினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்து விட்டு அனுப்பி விட்டனர். சிறிது தூரம் வந்த போது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த நிவேல், அங்கிருந்த போலீசாரிடம் 3 பேர் போலீஸ் என்று கூறி பணம் பறித்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து காரில் வந்தவர்களை அழைத்து கொண்டு போலீசார் நரசிங்காபுரத்திற்கு சென்று, 3 பேரையும் பிடித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள், செடிமுத்தூரை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் மூர்த்தி (29), ஊர்க்காவல் படை வீரர். கார்த்திக் (29). இவர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் கடை வைத்து நடத்தி வருகிறார். ஆர்.பொன்னாபுரம் கோல்டன் சிட்டியை சேர்ந்த ரவி (26). எம்.பி.ஏ. பட்டதாரி என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story